மன ஓட்டம்!

Wednesday, October 08, 2008

Tamil, Sufi, Vedanta, Ma'rifa, Wahdatul Ujood

' லோகோ பின்ன ருசிஹி - உலகத்தின் ரசனை பல்வகைப் பட்டது ' என்ற போதிலும்,

கூர்மையில்லாத பற்கள் உடைய ரம்பம், மழுங்கிய கத்தி போன்றவற்றைப் பாவிப்பவர்கள் என்ற ஒரு சாரார் இருந்து கொண்டே இருப்பார்களோ? இது போன்ற கேள்வி இவ் வலை மனையை எதேச்சையாகப் பார்க்கும் பெரும்பான்மைபோருக்கு ஏற்படக் கூடும். ஆகவே, கவனம்! என்பதற்காக..

Tamil, Sufi, Vedanta, Ma'rifa, Wahdatul Ujood என்ற இந்த சொற்களை சேர்ப்போம். தேடு பொறிகளில் இச் சொற்களை இடும் ஆர்வலர்கள் யாருக்காவது, எப்போதாவது அகப்படட்டும் என்று இந்த சொற்களை சேர்த்திருக்கிறேன்.

இன்னும், பேசும் போது ஒரு போதும் பயன்படுத்தவே முடியாத, எனக்குத் தெரிந்த சில தமிழ் வார்த்தைகளையும் கொண்டு என் உணர்வுகளைப் பகிர்ந்து விடுவது என்ற நிலையில்,

ஆனந்தக் கூத்தாட்டம்! களிபேறுவகை!

காரணம், 'நூருன்னூர்" என்ற புத்தகத்தை மீண்டும் படித்த போது சென்ற தடவை புரிந்ததை விட கூடுதலாகப் புரிந்தது. Improved comprehension.

மேலெழுதப் பட்ட தலைப்புகளில் ரசனை உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் மன நிறைவு தரக் கூடும். இதன் மூல நூலாசிரியர் ஹெளஸிஷாஹ் ரஹிமஹ_ல்லாஹ். தமிழில் மௌலவி. ஷைக் அப்துல் காதிர் மன்பஈ அவர்கள்.

Tuesday, October 07, 2008

நோன்பு!

இன்னும் சில மணி நேரம் இருக்கிறது. ஒரே தாகம்.
வகுப்பில் பெரும்பான்மையான மாணவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்.

வீடு வந்ததும் அங்குமிங்கும் பார்த்து விட்டு சமையலறைக்குள் நுழைந்த அந்த சிறுவன் யாரும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு தண்ணீர் குடித்தான்.

நோன்பு முறிந்து விட்டது; யாருக்கும் தெரியாது! மனச்சாட்சியும், கண்காணித்துக் கொண்டிருக்கும் இறைவனும் யாரிடம் சொல்லி விடக் கூடும்; சொன்னாலும் தான் என்ன? அல்லது இவையெல்லாம் உண்மையா என்ன? என்ற நிலைகளெல்லாம் வருவதற்கு முன்பான பருவம்.

இயல்பான விஷயம் தானே இது என்றால் இனி வரும் செய்தியைப் பாருங்கள்.

நிர்வாக காரணங்களுக்காக நோன்பிருக்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று மறுக்கப் படுகிறது. அது ஒரு புகழ் பெற்ற கண்டிப்பான பள்ளியின் விடுதி.

காலை, மதிய, இரவு உணவு நேரங்களில் மாணவர்களில் யார், யாரெல்லாம் உணவருந்த வரவில்லை என்ற கண்காணிப்பு இருக்கும். ஆயினும்,
ரமலான் மாதத்தில் பகற் பொழுதில் நோன்பிருக்க வேண்டுமே!

அதிகாலை எழுந்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு நோன்பைத் துவங்குவது; காலை, மதியம் உணவறைக்குச் சென்று சாப்பிடுவது போல பாவனை செய்வது, மாலையில் மீண்டும் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து நோன்பை பூர்த்தி செய்வது ஓரிரு நாட்கள் மட்டும் அல்ல - ரமலான் மாதம் முழுவதும்.

இது என் சகோதரரின் மகன் செய்த காரியம். பலே! என்றது என் மனம்.

செயல்பாடுகளின் கடுமையே அதன் பால் மக்களை ஈர்க்கவும், புறக்கணிக்கவும் செய்கிறது; இவைகளின் பிண்ணணியில் இருக்கும் தத்துவார்த்த விளக்கமே முக்கியம் என்று யாரும் சொல்லும் போது..

குடும்ப, சமூக சு10ழல் நம்பிக்கைகளையும் அது தொடர்பான செயல்களை அறிமுகப்படுத்தி அவைகளில் ஈடுபடுத்துகிறது. சிறு வயதில் தொடங்கும் இந் நிலை வயது, அனுபவம், கல்வி, சு10ழல் மாறும் போது தேய்கிறது அல்லது வளர்ந்து வலுவாகிறது. இன்னின்ன நம்பிக்கைகள் எனக்கு; செயல்களில் அவைகளை, இவைகளைச் செய்வேன், மாட்டேன்.. ஏன் என்றால்... என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் வருகிறது. சிறு வயதில் ஏன், எதற்கு என்ற தெளிவு ஏற்படுவதற்கு முன்னரே பழக்க அடிப்படையின் காரணமாக கைவரும் செயல்பாடுகளைப் பழகவில்லை என்றால் செயல்பாடுகளின் தத்துவார்த்தமான நிலைகள் தெரியும் வயது வந்த பின்னர் பழகும் போது சிரமம் அதிகமாகவே அல்லாது கைவருதில்லை என்பேன்.