மன ஓட்டம்!

Thursday, January 10, 2008

சரியான குறி!

நம்பிக்கையின் நிலை, பயம், இலாப நோக்கு போன்ற காரணங்களால் நாவில் ஒன்றும் பிறரால் எட்டிக் கொள்ள முடியாத பாதுகாப்பான இடம் என்பதால் கல்பில் ஒன்றும் ஆக இரு வேறு நிலை கொண்ட தன்மை நீங்கி இரட்டை நிலை என்பதே இல்லை; உள்ளும் புறமும் ஒரே தன்மை தான் என்ற நிலைக்கு சில அம்சங்கள் வரும் போது அதுவரை நிலவி வந்த ஒரு குற்ற உணர்ச்சி நீங்கி மகிழ்ச்சி ஏற்படுகிறது. நிலவும் ஏராள இரட்டை நிலைகளில் ஒன்று நீங்கிய அனுபவம்.

இன்ன இறை நேசரின் பொருட்டால் என் இன்ன தேவையை இறைவா நீ நிறைவேற்று என்று கேட்கக் கூடிய துஆக்களில் என் மனம் ஆழ்ந்து இலயிப்பதில்லை. அதாவது நாவில் துஆவின் சொற்கள் உற்பத்தியாகும். ஆனால் கல்பில், நாம் தவறு செய்கிறோம் அதற்கு இறைவன் தண்டிப்பான்; நாம் நன்மை செய்கிறோம், அதற்கு இறைவன் வெகுமதி தருவான். இப்படியிருக்க அறிந்தே செய்த தவறுகளின் பின்னர் இன்ன இறைநேசரின் பொருட்டால் என்னை நீ மன்னிப்பாயாக! என்று கேட்பது நன்றாகவா இருக்கிறது. அப்படி இறைஞ்சினால் அது ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு அருகதையான ஒன்றா என்ன? என்ற கருத்து தோன்றும். நான் நெருங்கிக் பழகி சகவாசம் கொள்கிற உயர்ந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு மனதாக இவ்வாறு இறைஞ்சுவது நல்ல ஒரு வழி, பலம் என்ற கொள்கை உடையவர்களாக இருக்க நாவில் ஒன்றும் கல்பில் ஒன்றுமான இந்த இரட்டை நிலை தொடர்பான குற்ற உணர்ச்சி அவ்வப்போது தலை தூக்கும்.

குறி பொட்டில்! சரியான தருணம். விசையை இழுத்து விட வேண்டியது தான். ஆசாமி குளோஸ்! பரம எதிரி சில விநாடிகளில் இருக்கப் போவதில்லை. கொரில்லா போர்களில் பலரை சாய்த்த அந்த ராணுவ உயர் அதிகாரி இதோ தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டு இப்போது புறப்படப்போகும் துப்பாக்கி ரவையை அனுப்பும் கொரில்லாவின் துப்பாக்கியின் சுடு தூரத்தில்...

உலோக ரவை தலையைத் துளைத்து அவர் சரிந்து விழுமுன்... அப்பா!

இவ்விதமாக குரலெழுப்பி பிரியத்துடன் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்ட பிள்ளைகள்... அக் குழந்தைகளை ஓடி சென்று அரவணைத்த அந்த ராணுவ அதிகாரி..

ஒரு கணம்.. விசையில் விரல் வைத்த அந்த கொரில்லாவுக்கு தயக்கம்!

இல்லை, வேண்டாம்...! அடுத்த சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்கிறேன்.

திரும்பி விட்டான். அடுத்த சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்கிறேன். அந்தக் குழந்தைகளின் பொருட்டால் தப்பித்தான்...மனம் இவ்விதம் சொல்லிக் கொண்டிருந்தது.

இவ்விதமாக ஒரு பத்திரிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமான ஒரு போராளி பாசம் பொழியும் இந்த பிள்ளைகளின் பொருட்டால் அந்தத் தருணத்தில் எதிரிக்கு உயிர் பிச்சை அளித்தாகப் படித்த இந்த நிகழ்ச்சியை மற்றும் இறைநேசர்களின் பொருட்டால் என்ற துஆ ஆகிய இரண்டையும் உவமையாக எடுத்து நான் மதிக்கும் பெரியவர்களின் கருத்துக்கு சாதகமாக என் மனதுக்கு சமாதானம் சொன்னேன்.

அது சரி, ஆனால், இந்த ராணுவ அதிகாரி பிள்ளைகள் மேல் மிகுந்த பாசம் சொண்டிருக்கிறார்; பிள்ளைகள் தந்தை மீது பாசம் கொண்டிருக்கிறார்கள். அது மனம், சொல், செயல் ஆகிய நிலைகளில் வெளிப்பட்டு மறைந்து அவதானித்த போராளி மனதை மாற்றியது. இறை நேசர்கள் மீது மனம், சொல், செயல் ஆகிய நிலைகளில் அல்லாது வெறுமனே அவர்களின் பெயரைக் கூறுவதால்...? இவ்வித மறு மொழி வந்தது.

உவமைகளைக் கொண்டு உண்மைகளை அறிந்து விட முடியும், நெஞ்சங்களிலிருந்து நெஞ்சத்திற்கு என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க எளிமையான மற்றொரு உவமை எனக்குக் கிடைத்தது. அவ்வப்போது தலை தூக்கிய இந்த இரட்டை நிலைக்கான குற்ற உணர்ச்சி நீங்கியது.