மன ஓட்டம்!

Saturday, July 20, 2013

எம் கூட்டுக்காரர் யாவர்?



தோளுக்கு வளர்ந்து விட்டால் மகனும் தோழனே என்கிற ஒரு விதத்தில் நண்பர்கள் பட்டியலில் மூத்தவர் முஹம்மது மூஸா கான் வந்து விடுகிறார்! 

 சில ஆண்டுகளுக்கு முன்...Triplicane, Pycrofts Road...

தொப்பி வைத்துக் கொண்டு ரோட்டில் விற்கும் Pirated புத்தகங்களில் எதை வாங்கலாம் என்று புரட்டிக் கொண்டிருக்கக் கூடாது; மஞ்சள் புத்தகமும் இருக்கும்... மட்டமாக தோணலையா என்று வெகுண்டார்.

சரி, சரி! கடையில் அதீத விலை போட்டு அல்லவா விற்பனைக்கு வருகிறது...

அப்ப லைப்ரரிக்கு போங்க.. முதலில் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள்...

நியாயம் தான் என்று திரும்பி விட்டேன்.

தற்போது அக்கரை(றை) யில் kindle ல் புத்தகங்கள் வாங்குகிறார், அதன் App. இக்கரையில் எனக்கும் படிக்கத் தருகிறது. முதலில் தாகூரின் சிறுகதைகள் சில வாசித்தேன். மனிதர் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்றே சோக ரசம் பிழிந்து கொண்டே இருந்திருப்பார் போல! காபூலிவாலா மட்டும் பிடித்து இருந்தது. தற்போது Quiet என்ற தலைப்பில் ஒரு புத்தகம். அதை ஆரம்பித்து இருக்கிறேன். படித்தது வரை  கேள்விகள் சிலவற்றுக்கு என் மனம் சமாதானமடையும் விடை தந்து இருக்கிறது. 

நான் எப்படிப் பட்ட குணாதிசியங்கள் கொண்டவன்? 

நீர் அடிப்படையில் listener; speaker அன்று!

இஃது உயர்வான அல்லது மட்டமான நிலை? 

உயர்வும், மட்டமும் அல்ல! அல்ல! 

பள்ளிவாசலில், ஏன் தரீக்கா கூட்டங்களில் கூட ஏன் அமைதி இழந்து போகிறேன்? 

Evangelical mission களில் தாம் தேடும் அமைதி பெற்றுக் கொள்ளாதோர் யார் தெரியுமா-உன் போன்ற சுபாவக்காரர்களே; இஃது எக்ஸ்ட்ரோவெர்டியர் உலகம்த்தா!

மிகுதம் பயணம் செய்தது?

"Bus to Abilene"ல்  !
( ..... Tendency to follow those who initiate action - any action! )

Friday, August 17, 2012

பந்தயம் முடியவில்லை!

சில ஆண்டுகளுக்கு முன்..... வெற்றிகரமான தன்னுடைய தொழில் சாம்ராஜ்ய ரகசியம் என்னவென்று இந்த  தொழிலதிபர் கூறுவதைக் கேட்கிறாயா  என்று  நண்பரிடம் சொன்னேன்.

அவரது கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் என்று  விஷயத்தை சொல்லவும், புகைத்துக் கொண்டிருந்த அவர் வானை நோக்கி புகையை ஊதினார்... கால் வாசி தான் கரைந்திருந்த சிகரெட்டை கீழே போட்டு சவட்டினார்..... உயிர் தலத்தில் ஓங்கி ஓங்கி  உதைபட்ட போதும் (repeated kicks in the crotch) கொட்டாவி விடும் Mr.Bean Reborn ஆக அவர் என்னை பரிதாபமாகப் பார்த்தார் . சலிப்புடன் சொன்னார்  "அத்தா.. அவனவன் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றால் ஏதாவது சொல்லுகிறான்.. பத்திரிக்கைகாரன் அதை பிரசுரித்து சம்பாரிக்கிறான்... உன்னைப் போன்றவன்  அதனை மனனம் செய்கிறான்..அது ஒன்றும்  வேதவாக்கு இல்லை... அப்படியானால் நீர் குறிப்பிடும்  இந்த நபர் Forbes list ல்  இல்லையே?...." கலவரமடைந்தேன்.

பொருளாதாரமும், தர்க்கமும் கலந்த கல்லைக் கட்டி இழுத்து எந்த மடாலயத்தில் பயின்றார் இவர்! போகட்டும்  என்று விட்டு விட்டேன்.

பொதி அதிகம், விமானக் கட்டணம் எகிறும் என்று மகன் விட்டு விட்டு சென்ற புத்தகங்களில் ஒன்றை தற்போது எடுத்து வாசித்தேன். Fooled by Randomness - The Hidden Role of Chance in Life and in the Markets - Nassim Nicholas Taleb என்பாரின் புத்தகம்.

முதல் அத்தியாயத்தில் ஹிகாயத்  ஒன்று சொல்லி ஆரம்பிக்கப்படும்.... ஞானி  சொலோன், க்ரோசீயஸின்  அரண்மனைக்கு  வருவிக்கபடுவார். தன்  செல்வப் பெருக்கு அவரை மிரட்டும், நீ தான் உலகிலேயே மிக மகிழ்ச்சி ஆனவன் என்று சான்று கொடுத்து விட்டு போவார்  என்று மன்னன் இறுமாப்புடன் இருக்க அவர் போட்ட பட்டியலில் வீர மரணம் தழுவிய ஓரிரு அரசர்கள் மட்டுமே!

அடுத்தடுத்த பக்கங்களில் நகைக்கச் செய்யும் வாக்குச் சாதுரியமான பதங்களில் தன் கருத்துக்களை தரவுகளுடன் வரைந்திருக்கிறார். மீண்டும் கலவரமடைந்தேன்... சில ஆண்டுகளுக்கு முன் வானில் புகை விட்ட நண்பரின் அதே கருத்துகளை தகுந்த முகாந்திரத்துடன் கூறி வான் புகையை என் முகத்தில் ஊதி விட்டிருக்கிறார். போகட்டும். ( B School களில்  Ph.D கள் கைப்பற்றிய வில்லாளன்.)

சொலோனின் மகிழ்ச்சி பேர்வழிகள் பட்டியலில் தான் இல்லையே;  இறந்தவர்களின் பெயர்கள் மட்டுமேவா.. ஏன் என வினவ .... பெரியவர் சொன்னதாக நீண்ட இலக்கிய நய வசனங்கள்.... அதைக்  கொச்சையாக சுருக்கி ... "it ain't over until the fat lady sings" ஸாம்.

எல்லாம் நேரம்!.... சைரஸ் மன்னனால் க்ரோசீயஸ்  சிறை பிடிக்கப்பட்டு... உயிருடன் எரியூட்டப் பட.

சொலோன்! நீர் சரியாகவே சொன்னீர் என்று ஓலமிடுகிறான். (என்ன புலம்பல்  என்று கேட்டு அறிந்த சைரஸ்...ஆம்! பந்தயம் இன்னும் முடியவில்லை.. எனக்கு தான்  என்று விடுதலை செய்து விடுகிறான்.)

  

Saturday, April 09, 2011

ராஷ்ட்ரிய பாஷா!


" Unless the source of a statement has extremely high qualifications, the statement will be more revealing of the author than the information intended by him. "

எனக்கு "நான்" என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு நிலைமை இருந்து கொண்டே இருக்கிறது! ஆரோகிக்கியமான அளவு?

ஒருவர் தன்னுடைய சமூக, பொருளாதார நிலைகளை இவ்வாறு தான் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு அலகு நிர்ணயம் செய்யும் ஒரு குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.  Self esteem அதை நிர்ணயிக்கிறது. இக் குழுவில் நான் இருக்க வேண்டும் அல்லது கூடாது என்ற நிலையை எய்துகிறார். உனது எண்ணம், சொல், செயல் அழகாக இருக்கிறது அல்லது இல்லை என்ற Value இங்கு வருகிறது! - ம் . "சிலர் அப்படிதான்! விமானப் பயணத்தின் போது போட்டு விடப் பட்ட Tag ஐக் தங்கள் பெட்டிகளில் இருந்து கழற்றுவது இல்லை " என்று பரிகாசமாக சொல்வதும் அந்த செயலை செய்வதும்

Adherence to  right principles என்பதை விட பொருளாதாரம்  பெரும்பாலானவர்களின் நிலையை மாற்றுகிறது - மாற்றத்தை அனுமதிக்கிறார்கள்.  இந்த ரீதியில் இந்த படத்தில் நான்!

Labels: ,

Thursday, January 13, 2011

பொங்கும் எங்கள் வீட்டுக் ......!

நல்ல அண்டை வீட்டுக்காரர்கள்; ஒளிவு மறைவு இல்லாமல் தத்தம் வீட்டில் நடந்த விஷயங்களைக் கூறி சென்ற பிறகுதான் இதை எழுத தீர்மானித்தேன்.

என்ன.. முகத்தை ஒரு மாதிரி ...
சோக ரசம் எப்போதும் பருகிக் கொன்டு சீரியஸ் முகத்தோடு மனிதன் ஜீவிக்கக் கூடாது learn to separate the inconvenience from the real problems! If you break your neck, if you have nothing to eat, if your house is on fire - then you have got a problem. Everything else is inconvenience ... பட பட என்று ஒரு மேற்கோளை சுட்ட அண்ணன் விஷயத்தைக் கேட்ட பின் மௌனமாகி விட்டார்.

அநேகமாக அவரும் அனுபவித்திருக்க வேண்டும்.

கொத்தனார் ஒருமுறை வந்தார்.. எதோ அடைப்பு, ஆளை அனுப்புகிறேன் என்று சொல்லிச் சென்ற ஆள் ஒரு வாரம் கழித்து வந்தார். அவருடன் வந்த ஆள் சும்மா சொல்லக் கூடாது, அவரால் ஆன மட்டும் பார்த்தார்.

அப்பாடா! சரியாகி விட்டதா? மகிழ்வுடன் சம்பளம் கொடுத்து அனுப்பினேன்.
மலையாள உறவுக்காரர்கள் எப்போதும் திடும் பிரவேசமாக வருவர்; வீட்டில் தங்குவர்; கால நேரம் பாராது புறப்பட்டும் விடுவர் . மெதுவாகக் கார் ஓட்டவோ, பேசவோ என்பது போல சில விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது தவிர தெரியாத விஷயங்கள் இல்லை; கெட்டிக்காரர்கள் என்று நான் ரசிப்பது உண்டு.

அன்று நள்ளிரவில் வந்து அதிகாலை நேரத்தில் அவர்கள் புறப்பட்ட போது திகைப்படந்தவர்களாக திரும்பி சென்றார்கள்.

மீண்டும் கொத்தனார்.

இம்முறை ஏர் பைப்பை மாற்றும் தீர்மானம்; நிறைவேறியது!

மீண்டும் ஒரு தடவை வந்த மலையாளத்து உறவினர் தங்கவில்லை. தப்பினர்.

கோப்பையை மாற்றி விட வேண்டிய கட்டம் என்றார் கொத்தனார்.

கோப்பை என்ன செய்யும்? அதிலிருந்து புறப்படும் பைப்பில் தானே atherosclerosis! Baloon angio மாதிரி ஒரு உபாயம் பாருங்கள்; வீணாக உடைக்காதீர்கள்; அப்புறம் மேட்சிங் டைல்ஸ் அது இது என்று வளரும்! ....இது என் மகள்.

Sunday, December 27, 2009

ஹோட்டல் கிண்ணி!

ஒரு முறை இடுக்கி அணை வழியாக எர்னாகுளம் செல்ல நேர்ந்தது. பசி. நல்ல ஹோட்டல் ஒன்று பார்த்து சாப்பிட்ட பிறகு தான் பயணம் என்றார் எங்களின் அமீர் சாப் பரீது. அமீருகுக் கட்டுப்படுவது போல என் பசிக்கு லப்பைக் கூறினேன். சகோதரரின் குவாலிஸில் பயணம் செய்த நண்பர்கள் அனைவரும் ஆமோதித்தனர். எங்களில் யாருக்கும் மலையாளம் வாசிக்க அந்நாளில் தெரியவில்லை. எடுப்பாக தெரிந்த ஹோட்டலில் தமிழில் பெரிய போர்டு இருக்க அதை வாசிக்க முடிந்தது. ஹோட்டல் கிண்ணி! பரீது... இந்த பெயர் பொருத்தமா தெரியவில்லையே.. வேற ஒரு ஹோட் ... வாக்கியம் முடிவதற்குள் புயலாக புகுந்து விட்டார் அமீர் கடையில்.

என்னென்ன்ன சாபிட்டோம் என்றெல்லாம் நினைவில் இல்லை. ஆனால், வினோதமான அந்த தமிழ் பெயர் அந்த நல்ல ஹோட்டலுக்கு எப்படி வைக்கப்பட்டிருக்கும் என்று எங்களுக்குள் சர்ச்சை அவ்வப்போது நடக்கும்.

Prof.Prof.செல்வரத்தினம் கால் எலும்புகளை படம் காட்டி பாடம் நடத்தும் போது, கிண்ணி இறங்கி விடும் ஆமா... என்று எச்சரிக்கை செய்கிறார்களே அது இதோ.. இது தான் Knee Cap, Patella என்று இலக்கு காட்டி விளக்கியது இன்றும் நினைவில் உள்ளது. இந்த சமாச்சாரத்தை நல்ல கடைக்கு நாமம் சூட்டியதன் மர்மம் என்னவாக இருக்கும்?

M.Sc., M.Phil..முடித்து சமீப கால ஆர்வமாக மலையாளம் படிக்க கற்றுக்கொண்ட என் மகளிடத்தில் இந்த சூழலை விளக்கி இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க கேட்டேன். ஹோட்டலின் பெயர் நீங்கள் வாசித்தது போல அல்ல அது ஹோட்டல் ..........

தெளிவாக, Contextual Meaning கொடுக்கப்பட்டதில் அப்படியா..! என்று மனம் நிம்மதி பெற்றது. உங்களில் யாருக்காவது இந்த நாம காரண விஷயத்தில் நிம்மதி இழந்திருந்தால் என் மகளுக்கு ayshamma@hotmail.com ஒரு மின் மடல் அனுப்பலாம்!

Friday, March 20, 2009

அந்துக்காயும் ஆனப்பரம்பில் மதியூகியும்!

keeping your eggs in many baskets or keeping them in a few baskets? முதலீட்டு விஷயங்களைப் பொறுத்தவரை ஒரு அடிப்படைத் தேவை நிர்ப்பயம்! தத்துவமும், பொருளாதாரமும் கலந்த இத்தகைய கொழுக்கட்டையை எனக்குப் படைத்த பின்

தன்னுடைய வேறொரு பால்ய நண்பரிடத்து நடைமுறை சாத்தியம் மற்றும் சமன்பாட்டுக் கணிதம் கலந்த கொழுக்கட்டையை படைத்ததுடன் நில்லாது யோசிடா! டேய்! யோசிக்க சள்ளை படாதே! என்று பட்டவர்த்தனமாக மிளகாய்ப் பொடியை தூவினார் ஆனப்பரம்பில்.

நீ சொன்னதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது என்று நான் சொல்லி கூடுதல் காரத்தை சேர்த்தேன். உபாயம் பலித்தது; நழுவினேன்!

ஒருமுறை கேரளாவில் உறவினர் வீட்டு திருமணம். முன்னதாகவே தன் செவ்வந்தி பூ நிற Ford Fiesta வில் வந்து விட்டிருந்த ஆனப்பரம்பில் என்னை "இவிடே வரூ" என்று அழைத்து ஒரு கசெரையில் இருக்க வைத்தார்.

ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்ற கணக்கில் என்னுடன் வந்த காரம் படைக்கப்பட்ட நண்பரை தன் ஆள்காட்டி விரல் சுட்டி "இத் தேஹ்ம் நின்களுடே பந்துவான்னு? எப்பலாம் இவ்டே எத்தி ? " என்று இரட்டுற மொழிந்தார்.

அதற்கு காரம், இப்போதுதான் எத்த போகிறது; எத்தி முதுகில் சவட்டி கழியும்! கூனல் குருக்கன் ஆவாய், உன் கூவல் குட்டிகானம் கடந்து பாளையத்தை எட்டும்! என்று மறுமொழி பகர்ந்தார்.. காதில் புகை வந்து கொண்டிருந்தது.

அதை சற்றும் பொருட்படுத்தாமல் நீ " Balanced " ஆக இருப்பியா? " Focused " ஆக இருப்பியா? நீண்ட நெடிய லெக்சர்.. எப்படியும் " Cynic " ஆக இருக்க கூடாது; "Analyze " பண்ணும், ஒய்! கால் மேல் கால் போட்டு கொண்ட மதியூகி என்னிடம். இதில் எது உன் பாணி?

இவருக்கென்ன? என் பாணி எதுவானால் என்ன? அக்கறை ஒரு அளவு தான்! கொண்டோடியில் மலைப்பாதையில் தலைசுற்றில் அலைக்கழிக்கப்பட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தால்..

என் விதியே! சுய பச்சாதாபத்தில் கண்களில் நீர்..

என் மலையாள ஞானம் : இவிடே வரூ - இங்கே வா-அன்புடன் அழைக்கும் சொல், பந்து - சொந்தம், குருக்கன் - நரி, கூவல் - ஊளையிடல், சவட்டி - மிதித்து, கசெரை - நாற்காலி, Kondody Motors - குமுளி-கோட்டயம் வழியில் முரட்டுத்தனமாக இயக்கப்படும் பஸ் கம்பெனி.

Tuesday, March 10, 2009

Goose Berry

அதிகாலையில் பழநி வந்து தோட்டத்தில் மோட்டார் காயில் தீய்ந்து போய் விட்டது என்ற செய்தி சொன்னார். அதிலிருந்தே அத்தா கடு கடு என்றிருக்கிறார். சாப்பிடுகிற நேரத்தில் தம்பி தொண தொண என்கிறார் ; நைய புடைக்கப் படுவார்! குறைந்த பட்சம் தலையில் ஒரு கொட்டு கிட்டும்; நெல்லிக் காய் சைஸில் புடைக்கும் என்ற வண்ணம் பெரியவர் எண்ணிக் கொண்டிருந்தார்..

அமல்! செயல்!அமல் செய்!
செயல் படு! இதுவே என் முந்நாள் முழக்கம்!

'' படுக்கையில் இருந்து தவ்வி துள்ளி எழுந்திரு, தூக்கம் இக்கணமே பறக்க வேண்டும்! ஜேம்ஸ்பாண்ட் அப்படித்தான் எழுந்திருப்பார்! கண்களைக் கசக்கிக் கொண்டு, சோம்பலாக தொள தொள என்றெல்லாமா இருப்பார்கள்? கூடாது! மிடுக்கு, தேவை ராணுவ விறைப்பு!. '' மிரளும் ஆட்டுக் குட்டியாக இருந்த என் மூத்த மகன் குளிர்ந்த நீரில் ஒளுச் செய்து அதிகாலை தொழுகைக்கு ஓடியாக வேண்டும். தொழுத பின்னர் தொடரும் நஃப்ஸைக் காய்ச்சி எடுக்கும் திக்ரு சபையில் உட்கார்ந்தாக வேண்டும். இப்படியாக வளர்க்கப் பட்டவர் பழநியின் நல்வாக்கு கேட்டபின் தம்பியின் தலையை கொஞ்ச நேரம் கழித்து வாஞ்சையாக தானே தடவிக் கொடுக்கவும் எண்ணம் கொண்டார் போலும்!

'' ஒரே ஒரு தரம் முறைத்ததோடு சரி. அத்தா விட்டு விட்டார் .என்ன ஆனது? அக்காவையும் என்னையும் ஆணம் காய்ச்சி விட்டு ஒன்பது ஆண்டு இளைய தம்பியை இவ்விதம் வளர்த்தால்.. ... பாரேன்! காலை படுக்கையில் இருந்து எழச் செய்ய - தூக்கத்தை விட தொழுகை மேலானது - என்ற மெல்லிய குரல் வாசகம் மட்டும் தானா? " இது பெரியவர் தன் அம்மாவிடம்!

அதற்கு அந்த அம்மாள் '' என்ன செய்வது! ஸீன் கானரிக்கு வயதாகி விட்டது! மகனே! கேள்! மனிதர் Impulsive ஆக இருக்கக் கூடாது; always more ready for action than to reason என்றா இருப்பது ! மலக்குகளை விட மனிதன் சிறந்தவன்; அவனுக்கு இஹ்த்தியார் கொடுக்கப் பட்டு இருக்கிறது. He should always exercise and choose the right choice. Impulsive ஆக - பழக்க தோஷத்தால் நல்லமல் செய்வதில் சிறப்பில்லை. Blazing Magnum த்துடன் உலா வந்தால்.. ? அப்புறமென்ன?.. வாயில் இரத்தத்துடன் வந்த கீரியின் மீது தண்ணீர் குடத்தைப் போட்டு அதன் பிராணன் போன பிறகு உண்மை அறியும் அபலை! '' என்றெல்லாம் இப்போது முழங்குகிறார். நெற்றிக்கண் ?

என்ன செய்யலாம்.. புரிகிறது! உன் ஆதங்கம் அவரின் உபதேசத்தைப் பற்றி அல்ல மாறாக அடக்கு முறை உத்தி பிரயோகம் தானே? அந் நாளில் அடக்கப் பட்டு பறிக்கப் பட்டு விட்ட உன் சுதந்திரத்திற்கு என்ன பரிகாரம்? யோசிப்போம் '' என்பதாக சமாதானம் செய்தது.